ரூ.4,813 கோடி கூடுதல் நிதிஆதாரம் திரட்ட தமிழகம் தகுதி..!
ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை அமல்படுத்தியது. இத்திட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலமாக, நாட்டின் எந்த மூலைக்கு குடிபெயர்ந்தாலும், குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பங்கள், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மூலம், நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.
இத்திட்டத்தை ஆந்திர பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் நிறைவு செய்துள்ளன. தற்போது இந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இணைந்துள்ளது. இதனால், வெளிச்சந்தையில் ரூ.4,813 கோடி கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட தமிழகம் தகுதி பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய செலவினத்துறை வழங்கியுள்ளது.
ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை நிறைவேற்றிய மாநிலங்கள், மாநில மொத்த உற்பத்தியில் 0.25 சதவீத அளவுக்கு கூடுதலாக கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.. இதன் அடிப்படையில் மொத்தம் ரூ.30,709 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய செலவினத்துறை அனுமதி வழங்கியது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை போல் தொழில் தொடங்குவதற்கான சீர்திருத்தம், நகர்ப்புற/உள்ளாட்சி பயன்பாடுகளுக்கான சீர்திருத்தம், மின்துறை சீர்திருத்தம் இவற்றை அமல்படுத்தும் மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற மத்திய செலவினத்துறை அனுமதித்து வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை 11 மாநிலங்களும், உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தத்தை 4 மாநிலங்களும் மேற்கொண்டுள்ளன. இதனால் இம்மாநிலங்கள் மொத்தம் ரூ.61,339 கோடி அளவுக்கு கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.