திறமையான ஊழியர் வேலையை விட்டு நின்றுவிட்டால் என்ன செய்வது..?
உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் இப்ராகிம். நல்ல திறமையான ஊழியர். அவர் வேலைக்கு சேர்ந்த பின் கம்பெனி பெரிய லாபமும், வளர்ச்சியும் அடைந்தது. சேல்ஸ்மேனாக வேலைக்கு சேர்ந்தவர் படிப்படியாக வளர்ந்து இப்போது அவர் தான் நிறுவனத்தின் மேலாளர். அவரின் இருப்பால் நிறுவனத்தில் உரிமையாளர் சின்னதுரைக்கு வேலை சுமை ஏற்படவே இல்லை. இந்நிலையில் இப்ராகிமிற்கு வேறு இடத்தில் வேலை கிடைத்துவிட்டது. கூடுதல் சம்பளம். கிளம்பிவிட்டார். இப்போது சிக்கலில் சின்னதுரை.
இப்போது புதிதாக ஒருவரை மேலாளர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுத்து அவருக்கு வேலை சொல்லிக் கொடுப்பதா.. அல்லது ஏற்கனவே இருக்கும் ஊழியர்களில் ஒருவரை மேலாளராக நியமிப்பதா.? சின்னதுரைக்கு ஒரே குழப்பம். இந்த குழப்பம் சின்னதுரைக்கு மட்டுமல்ல. பெரிய பெரிய துரைகளுக்கும் ஏற்படும். சரி.. என்ன செய்வது.! மேலாளருக்கு தகுதிகள் என்ன என்பதை முதலில் உரிமையாளர் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
மேலாளர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? நிறுவனத்தை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்று உரிமையாளர் நினைக்கிறாரோ, அதை நடத்திக் காட்டுபவராக இருக்க வேண்டும். பல வேலைகளை பலருடைய நோக்கிலிருந்து ஒரே நேரத்தில் அவர் செய்வதாக இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் வித்தைகள், புதிய திட்டங்கள் வகுக்கும் யுக்தி தெரிந்தவராகவும், ஊழியர்களின் தன்மை உணர்ந்து வேலை வாங்குபவராக இருக்கு வேண்டும். நிறுவனத்தில் வேலை வாங்கும் மேலாளர் கிட்டதட்ட உரிமையாளருக்கு சமம் என்பதால் இருவருக்கும் இடையேயான இடைவெளியுடன் அவர் சரியான வேலை செய்தாக வேண்டும். முதல் முடிவு.. ஏற்கனவே இருக்கும் ஒருவரை மேலாளராக பணி அமர்த்துவது.! அப்படி வளர்ந்தவர் தானே இப்ராகிம். இப்ராகிமை போல் பின்னால் வருபவரும் மேலாளருக்கு பொருத்தமானவரா என்பதை ஆராய வேண்டும். அவரை மேலாளராக நியமித்தால் சகஊழியர்கள் அவருக்கு ஒத்துழைப்பார்களா என்பதை ஆராய வேண்டும்.
இவ்வளவு நாள் தோள் மேல் கை போட்டு வேலை பார்த்தவன் இன்று என்னை வேலை வாங்குவதா என்ற எண்ணம் சகஊழியருக்கு ஏற்படாமல் நடக்கும் மேலாளராக அவர் செயல்படத் தகுதியானவர் தானா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே அவர் வேலை பார்த்த நாட்களில் செயல்பட்ட விதத்தினை (ப்ராக்ரஸ் ரிப்போர்ட்) ரிவைண்ட் செய்து பார்க்க வேண்டும். இது நாள் வரை கொடுத்த வேலையை சரியாக செய்த நபர் என்ற அளவுகோளை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரை மேலாளராக அமர்த்தக் கூடாது. பணியின் போது நிறுவனத்தின் மற்ற விஷயங்களில் அவர் காட்டிய ஈடுபாட்டை அலசி ஆராய வேண்டும்.
சரி.. இரண்டாவது முடிவு.. புதிதாக ஒருவரை தேர்ந்தெடுப்பது. ‘‘புதிதாக ஒரு மேலாளரை கண்டுபிடித்து, அவர் நமது நிறுவனத்தை புரிந்து கொண்டு, விற்பனையை அதிகரிப்பதற்குள் நாட்கள் ஓடிவிடும். இப்படி ஒரு குழப்பம் இருக்கும் தானே. அதை புறம் தள்ளுங்கள். வெளியிலிருந்து ஒருவரை மேலாளராக நியமிப்பது என முடிவெடுத்து விட்டீர்கள். இனி அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
அவர் ஏற்கனவே பணியாற்றிய நிறுவனத்தில் அவரை பற்றிய அபிப்ராயம் என்ன என்பதை ஆராயுங்கள். அவர் அந்த நிறுவனத்திற்கு எந்த அளவிற்கு உதவிகரமாக இருந்துள்ளார் என்பதை கண்டறியுங்கள். அங்கிருந்து அவர் வெளியேற காரணம் ஊதிய உயர்வா அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்திற்குள்ளான மனச்சங்கடமா என்பதை விசாரியுங்கள். ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தில் அவருக்கு கீழ் வேலை பார்த்தவர்களை சந்தித்து அவர் குறித்து பேசுங்கள். இப்ராகிம்மை போன்றவர் இருந்தால் மட்டுமே உங்கள் பணிச்சுமை குறையும் என்பதை உணர்ந்தால் புதிய ஒருவரை ஆராயும் வேலையில் சிரமம் இருக்காது.