சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஜாமீன் ஏன் ?
“புதிதாக சிட் ஃபண்டில் சேரும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கவே செய்கிறது. சிட் ஃபண்டில் பணம் எடுப்பவர் சீட்டுக் காலம் முடியும் வரை தொடர்ந்து தவணைத் தொகையைச் செலுத்தி வர வேண்டும். அவர் அவ்வாறு தவணைத் தொகையைத் தொடர்ந்து செலுத்துவார் என்பதை உறுதி செய்துகொள்வதற்காகத்தான் ஜாமீன் பெறப்படுகிறது. சீட்டு எடுத்தவருக்குக் கொடுக்கப்படும் பணம் அந்த குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட பணம்தான்.
சீட்டு எடுத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் தவணைத் தொகையைச் செலுத்தி வந்தால்தான், சீட்டு எடுப்பவர்களுக்குரிய நேரத்தில் பணத்தை அளிக்க முடியும். சீட்டு எடுப்பவர் எடுத்த பின்னர் கட்ட வேண்டிய தொகையையும், தவணைகளின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு அதற்கேற்றவாறு ஜாமீன் அளவு நிர்ணயிக்கப்படும். இதற்கு முறையான வருமானம் உள்ள நபர்களை ஜாமீன்தாரராகக் கையெழுத்திடச் சொல்லலாம்.
சீட்டில் பணம் பெறுவது என்பது கடன் பெறுவதற்கு ஒப்பான ஒரு செயலாகவே கருதப்படுகிறது. எனவே, கடன் தருவதில் உள்ளது போன்ற நடைமுறைகள் அனைத்தும் சீட்டுப்பணம் அளிக்கப்படும் போதும் பின்பற்றப்படும். சீட்டு குரூப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் நலனையும் பணத்தையும் பாதுகாக்கவே இந்த ஏற்பாடு.’’