ஏடிஎம் மையங்களில் கூகுள்பே, பேடிஎம் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்
உலகம் ரொக்கப் பணம் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்வது அதிகரித்து வருகிறது. அதற்கு ஒரு உதாரணம் இந்தியாவில் கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்து வருவது
இப்போது கார்டு இல்லாமல் செய்யும் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏடிஎம் மையங்களிலும் கூகுள் பே, பேடிஎம் போன் பே போன்ற யுபிஐ செயலிகள் பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையை NCR கார்ப்ப ரேஷன் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவை மூலம் ஏடிஎம் மையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏதும் இல்லாமல் யுபிஐ செயலிகளை ஸ்கான் செய்து பணம் பெற முடியும். எனவே ஏடிஎம் மையங்களில் யுபிஐ செயலிகள் மூலம் பணம் எடுப்பது எப்படி என விளக்கமாகப் பார்க்கலாம்.
நிலை 1 : உங்கள் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் உள்ள திரையில் QR குறியீடு / யுபிஐ பயன்படுத்தி பணத்தை எடுப்பதற்கான தெரிவை தட்டவும்.
நிலை 2 : ஏடிஎம் திரையில் QR குறியீடு காண்பிக்கப்படும். அதை உங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலிகள் உதவியுடன் ஸ்கான் செய்யவும்.
நிலை 3 : ஸ்கான் செய்த பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை உள்ளிட்டு யுபிஐ பின்னை அளிக்கவும். உடனே ஏடிஎம் இயந்திரம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை டெபிட் செய்து உங்களுக்கு ரொக்கமாக வழங்கி விடும்.
வரம்பு ஏடிஎம் மையங்களில் யுபிஐ செயலிகள் உதவியுடன் பணத்தை எடுக்கலாம் என்றாலும், அதிகபட்சம் 5000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.