வேலையை விட்டு தொழில் தொடங்க போகிறீர்களா..!
உங்கள் குடும்பம் உங்களுடைய வருமானத்தை மட்டுமே நம்பி இருந்தால், செய்யும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிட வேண்டாம். வியாபாரம் பண்ண முடிவு எடுத்து விட்டால் நிதானமாக யோசித்து குறைந்தது ஒரு ஆறு மாதச் சம்பளத்தையாவது சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
புரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் சேமித்து வைக்கும் சம்பள பணம் உங்கள் வியாபாரத்திற்கான முதலீடு இல்லை. வியாபாரத்தின் தொடக்க காலத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்கு கல்லாவில் கை வைக்காமல் குடும்ப செலவை எதிர்கொள்ளவே அந்த சேமிப்பு! வியாபார இலக்கு இலாபத்தை நோக்கி என்றாலும் நஷ்டம் ஏற்பட்டால் அதை சமாளிக்க வேண்டுமல்லவா..
முழு நேரமும் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவருக்குக் குடும்பத்தின் ஒத்துழைப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. நீங்கள் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேக்னெட்டாக இருந்தாலும் சரி, வீட்டில் மனைவியோ பெற்றொரோ ஒத்துழைக்கவில்லை என்றால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு போகாது.
மனைவியோ, அப்பா அம்மாவோ சகோதரரர்களோ வியாபாரம் தொடங்குவதை விமர்சித்தால் கோபப்படாதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் நன்மைக்கே யோசிப்பவர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சின்னச் சின்ன சந்தேகங்களையும் பொறுமையாக உட்கார்ந்து கேளுங்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்றெல்லாம் அடம் பிடிக்கதீர்கள். அவர்கள் தரப்பு நியாயங்களையும் புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் சந்தேகங்களுக்கும் மதிப்பு கொடுங்கள்.
ஒரு வேளை அவர்களுடைய சந்தேகம் உங்களுக்கும் நியாயமாகப் பட்டால், வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பதே நலம். அவர்களாகவே முன் வந்து ‘பிசினஸ் பண்ணலாம்’ என்று சொல்லும் வரை பொறுத்திருப்பதே பிசினஸ் தொடங்குவதற்கான முதல் வெற்றி.!