மோசடி நிதி நிறுவனங்களின் குணாதிசயங்கள்..! பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை காட்டும் எச்சரிக்கை..!
பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிதி நிறுவனங்களின் குணாதிசியங்கள் என அச்சிடப்பட்ட துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முறைகேட்டுடன் தொழில் நடத்தும் நிறுவனங்களின் குணாதிசியங்கள் என சுமார் 25 குறிப்புகளை தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் மோசடி நிதி நிறுவனங்கள் வெறும் வைப்புத் தொகைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இந்நிறுவனங்கள் 24 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வட்டி தருவதாகவும், ஒரே வருடத்தில் இரட்டிப்பாக பணம் தருவதாகவும் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கியின் நடைமுறையின்படி 12.5 சதவீதம் வட்டி மட்டுமே அளிக்க முடியும் என சரியான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டாளர்களை அறிமுகம் செய்வோர்க்கு 5 முதல் 25 சதவீதம் வரை கமிஷன் தருவதாகவும் மனைகள், நகைகள், கார் ஆகியவற்றையும் தருகின்றன.
சரியான நிறுவனங்கள் பதிவு செய்ய ரிசர்வ் வங்கியில் குறைந்தது ரூ.2 கோடி டெபாசிட் செய்திருக்கும். ஆனால் மோசடி நிறுவனங்கள் அது போல் எந்த தொகையும் டெபாசிட் செய்வதில்லை.
போலி நிதி நிறுவனங்கள் குறித்து
tneow@tn.gov.in என்ற இணையதளத்திலும்
eowscambuster@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் திருச்சியைச் சேர்ந்தவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு தொலைபேசி எண் 0431-2422220 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர போர்டுகள் இருக்காது. பெரும்பாலும் வாய்மொழி உத்தரவாதங்கள் தான் அதிகம் இருக்கும். டெபாசிட்டிற்கேற்ப ரசீதுகளை மாற்றிக் கொள்வர். அத்தகைய டெபாசிட் தொகையில் சொத்து வாங்குவார்கள். ஆனால் முறையான நிறுவனங்கள் முறையான வர்த்தகத்திற்கு மட்டுமே டெபாசிட் தொகையை பயன்படுத்தும். சொத்துக்களை வாங்க மாட்டார்கள்.
புரிந்து கொள்ள முடியாத அதிக திட்டங்கள் இருக்கும். பெரும்பாலும் இயக்குநர்கள், பங்குதாரர்கள் படித்திருக்க மாட்டார்கள்.
நிறுவனம் தொடங்கி கொஞ்ச நாளிலேயே கார் வாங்குதல் போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடுவர். பெரும்பாலும் வாடகைக்கு ரூம்கள் எடுத்து தங்குவார்கள். எளிதில் தப்பிச் செல்ல இது ஏதுவாக இருக்கும்” என்பன உள்ளிட்ட மோசடி நிதி நிறுவனங்களின் 25 குணாதிசியங்களை, முறையாக நடத்தும் நிறுவனங்களின் குணாதிசியங்களோடு ஒப்பிட்டு காட்டியுள்ளனர்.