முத்ரா வங்கிக் கடன் பெற வேண்டுமா..?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY-Pradhan Mantri Mudra Yojana Scheme) என்பதையே முத்ரா திட்டம் என சுருக்கமாக கூறப்படுகிறது. சிறு, குறு தொழில்கள் சேவைகள், வியாபாரம் மற்றும் உற்பத்தி சார்ந்த (விவசாயம் அல்லாத) தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும் கடன் திட்டமே முத்ரா கடன் திட்டம்.
சிசு யோஜனா (Shishu Yojana), கிஷோர் யோஜனா (Tarun Yojana) மற்றும் தருண் யோஜனா (Kishor Yojana) என மூன்று பிரிவுகளின் கீழ் முத்ரா கடன் வழங்கப்படுகிறது. சிசு கடன் பிரிவில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் கடன் பிரிவில் ரூ. 50,000 முதல் 5 லட்சம் வரையிலும் தருண் கடன் திட்டத்தில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தில் நீங்கள் கடன் பெற விரும்பினால் நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையில் அதற்கான விண்ணப்பப் படிவம் வைத்திருப்பார்கள். கடன் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், 17 தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கி, சிறு குறு கடன் வழங்கு நிறுவனங்கள், வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களில் முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. ஒரு வங்கிக் கிளை ஆண்டுக்கு 25 நபர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்க வேண்டும் அதிகபட்சமாக எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கடன் வழங்கலாம்.
இந்தத் திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் சார்ந்த கடன் திட்டமாகும். கடனுக்கான வட்டி விகிதமானது கடன் வாங்குபவரின் வணிகத்தின் தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய திறனை பொறுத்தது. பொதுவாக, குறைந்தபட்ச வட்டி விகிதம் 12 சதவீதமாகும்.
இத்திட்டத்தில் கடன் பெற வயது வரம்பு 18 முடிந்திருக்க வேண்டும். கடன் பெற இருப்பிடச் சான்று, மொபைல் எண், ஆதார் எண், பான் கார்டு, 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், திட்ட அறிக்கை, உபகரணங்கள் வாங்குவதாக இருந்தால் அதற்கான கொட்டேஷன், தொழிலிற்கான லைசன்ஸ், கூட்டு வியாபாரம் என அதற்கான உடன்படிக்கை நகல் (PARTNERSHIP DEED) என அனைத்து சான்றுகளையும் வழங்க வேண்டும். OBC / SC / ST பிரிவுகளின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களும் தொழில் அபிவிருத்திக்கு இக்கடன் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். உங்கள் நடப்பு கணக்கானது வாராக் கடன் கணக்காகவோ, வங்கி காசோலை ரிட்டன் கணக்காகவோ இருக்கக் கூடாது. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வங்கி முத்ரா கடன் அட்டை வழங்கும். நீங்கள் தொழிலிற்கான மூலப் பொருட்கள் வாங்கும் போது இந்த அட்டையை கிரடிட் கார்டு போல் பயன்படுத்தி 10 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் பெறும் வசதி உள்ளது. மேலும் விபரங்களை www.mudra.org.in என்ற இணையதளத்தில் அறியலாம்.