வங்கி சேமிப்புக் கணக்கில் அதிக தொகையை வைக்க வேண்டாம்..!
வங்கி சேமிப்புக் கணக்கு என்பது மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதாகவும், பணப் பரிமாற்றத்தை எளிதாக்குவதாகவும் இருக்கிறது.
தனிநபர்கள் மற்றும் சம்பளதாரர் களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறது. தொழில் புரிபவர்களுக்கு நடப்புக் கணக்கு இருக்கிறது. பொதுவாக, வங்கி சேமிப்புக் கணக்குக்கு முதலீட்டுத் தொகை மற்றும் முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ப, வங்கியைப் பொறுத்து ஆண்டுக்கு 2.5% – 6% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் சற்றுக் கூடுதலான வட்டி வழங்கப்படுகிறது. அவை 5% முதல் 7% வரை வட்டி வழங்குகின்றன. வங்கி சேமிப்புக் கணக்குக்கு தினசரி இருப்பு அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு, தரப்படும்.
இந்தக் கணக்கை ஒருவர் தனியாக, கணவன் – மனைவி, பெற்றோர் – பிள்ளை எனக் கூட்டுக் கணக்காக, இந்துக் கூட்டுக் குடும்பத்தினர், இளவல்கள் (18 வயதுக்கு குறைவானவர்கள்) அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் மூலம் வங்கி சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க முடியும். பெண்கள், மூத்த குடிமக்களுக்கு என சிறப்புத் திட்டங்கள் இருக்கின் றன. இவர்களுக்குக் கடன் கட்டணத் தள்ளுபடி அல்லது வட்டியில் தள்ளுபடி அல்லது சலுகை இருக்கிறது. கூடவே, குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையிலும் சலுகை இருக்கிறது.
வங்கிக் கணக்கு நாமினியை நியமிக்கும் வசதி உண்டு. கண்டிப்பாக நாமினியை நியமிப்பது அவசியம். அப்போதுதான் கணக்கு வைத்திருப்பவருக்கு ஏதாவது சிக்கல் எனில், கணக்கிலிருக்கும் பணம் உரியவருக்குப் போய்ச் சேரும். கூடிய வரையில் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வது நல்லது. பெரும்பாலோருக்கு சம்பளக் கணக்கு ஏதாவது வங்கியில் இருக்கும். அந்தக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்பு தொகை எதுவும் இருக்காது. தனியார் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்கில் நகரம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து மூன்று மாத சராசரி குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000, ரூ.10,000 என்பதாக இருக்கும்.
ஒருவர் அவரின் சம்பளத்தில் ஒரு பகுதியை வங்கி சேமிப்புக் கணக்கில் விட்டு வைக்கலாம். இந்தத் தொகை என்பது அவசர கால நிதித் தேவை மற்றும் ஆறு மாதம், ஓராண்டு வரைக்கான குறுகிய காலத் தேவைக்கான பணமாக இருக்கலாம்.
அவசரத்துக்குத் தேவைப்படும் பணத்தை மட்டுமே வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைக்க வேண்டும். நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட கால தேவைக்கு உரிய தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிடைக்கும் குறைவான வட்டி ஆகும்.