வரி நடைமுறையை எளிதாக்கணும்… உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..!
பத்திரங்கள் மற்றும் பங்குகள் போன்றவற்றில் வங்கிகள் செய்துள்ள முதலீடுகள் மீது கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவை வங்கியின் பொதுவான வர்த்தக கணக்கில் நிர்வகிக்கப்பட்டு வருவதால் தனியாக வரி தணிக்கைக்கு உட்படுத்த முடியாது என்று வங்கிகள் தரப்பு வாதிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கே கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு தங்களது தீர்ப்பில், “பத்திரங்கள் மற்றும் பங்குகள் போன்றவற்றில் வங்கிகள் செய்துள்ள முதலீடுகள் தனிக்கணக்குகள் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கூறப்படாத நிலையில், அவை பொதுவான வர்த்தகத்துக்குள்ளேயே நிர்வகிக்கப்படுகிறது.
எனவே அதில் வரும் வருமானம் வங்கியின் பொது வருமானமாகத் தான் கருதப்படும். வருமான வரி பிரிவு 14ல் பொது வருமானத்தில் இந்த முதலீடுகள் மீதான வருமானம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இவற்றுக்கு வருமான வரி வசூலிக்க முடியாது. எனவே வருமான வரி பிரிவு 14ஏ இந்த வருமானத்துக்குப் பொருந்தாது.
“வரி ஏய்ப்பு, வரி செலுத்தாமல் ஏமாற்றுவது போன்றவற்றை தவிர்க்க விரும்பும் அரசு, அதற்கேற்ப வரி நடைமுறைகளை தெளிவாகவும், எளிமையாகவும் உருவாக்க வேண்டிய கடமையையும் உணர வேண்டும். இவற்றை சரியாகச் செய்வதன் மூலம் வரி தொடர்பான விவகாரங்களில் தேவையற்ற வழக்குகள், சிக்கல்கள் வராமல் தடுக்க முடியும் . அதே சமயம் வருமான இழப்பையும் தடுக்கலாம்” என்றனர்.