அருமையான தொழில் : அச்சு வெல்லம் தயாரிப்பு! களை கட்டும் பொங்கல் அசத்தும் தொழிலாளர்கள்
அருமையான தொழில் : அச்சு வெல்லம் தயாரிப்பு! களை கட்டும் பொங்கல் அசத்தும் தொழிலாளர்கள்
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை என்றால், அது பொங்கல் தான். இந்த பண்டிகை தான் உழவு செய்த மாட்டிற்கும், சாப்பாடு தந்த நிலத்திற்கும், வீரத்தை பறைசாற்ற ஜல்லிக் கட்டிற்கும் தமிழின் அடையாள பண்டிகையாக நிகழ்ந்து வருவது பொங்கல் என்றால் அது தான் பெருமை.
இந்நிலையில் பொங்கலை அலங்கரிக்க கரும்பு, மஞ்சள், அரிசி என ஒரு புறம் இருந்தாலும், சர்க்கரை பொங்கலுக்கு இனிக்க ஒரு விஷயம் உண்டென்றால் அது வெல்லம் தான். அந்த அச்சுவெல்லம் எப்படி தயாரிக்கப்படுகிறது… பார்ப்போம் வாங்க…
கரும்பில் இருந்து சாறு பிழிந்து அதை கொதிக்க வைத்து வெல்லம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள், இந்தியர்கள்தான். கி.மு.1000ம் ஆண்டிலேயே இந்தியாவில் வெல்லம் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்க்கரை என்ற வார்த்தை இப்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
சமஸ்கிருதத்தில் உள்ள ‘‘சர்க்கரா’’ என்ற சொல்லில் இருந்து ‘சர்க்கரை’ என்ற சொல் உருவாகியிருக்கிறது. கரும்புக்கு ‘‘குடா’’ என்ற பெயரும் உண்டு. தற்போது கூட பல்வேறு மாநிலங்களில் வெல்லத்தை ‘‘குடா’’ என்றே அழைக்கின்றனர்.தொடக்க காலத்தில் கரும்பு ஆலைகள் இல்லாத போது விவசாயிகள் கரும்பை சாகுபடி செய்து அதனை தங்களுடைய இல்லங்களிலேயே சாறு பிழிந்து, பாகு காய்ச்சி சரியான பக்குவத்தில் அச்சில் ஊற்றி அச்சுவெல்லத்தை தயாரித்தனர்.
காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளின் வரவால், கரும்பு உற்பத்தி அதிகரித்தாலும் அச்சுவெல்லம் தயாரிப்பு முறை மட்டும் மாறவில்லை.அச்சுவெல்லம் தயாரிப்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அச்சுவெல்லம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.
அச்சுவெல்லம் தயாரிக்கும் முறைகள் குறித்து அய்யம்பேட்டையை அடுத்த மாகாளிபுரத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி சொல்கிறார்:
‘தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டையை சுற்றியுள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரஹாரம், மாகாளிபுரம், உள்ளிக்கடை உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சுவெல்லம் தயாரிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் தயாரிப்பு இருந்தாலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகமாக தயாரிக்கிறோம்.
பழங் காலத்தில் குஷ்பு, போண்டா உள்பட பல்வேறு வகையான கரும்பு ரகங்களை அச்சுவெல்லம் தயார் செய்வதற்காக சாகுபடி செய்வோம். ஆனால் மேற்கண்ட ரகங்கள் தற்போது இல்லை.இப்போது அனைத்து விவசாயிகளும் சி.ஓ.சி. 86032 என்ற ரகத்தையே பயன்படுத்துகின்றனர். அதேபோல சர்க்கரை தயாரிக்க சோனா ரக கரும்பை சாகுபடி செய்கின்றனர்.
கரும்பு சாகுபடி செய்த 7 முதல் 10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். 10 மாதங்களுக்கு மேலான கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் அச்சுவெல்லம் இனிப்பு சுவையற்று காணப்படும்.அச்சுவெல்லம் தயாரிப்பதற்காக சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து அறுவடை செய்ய தொடங்கி விடுவோம்.
இந்த அறுவடை மார்ச் மாதம் இறுதி வரை நடைபெறும். 1 ஏக்கர் கரும்பில் இருந்து சுமார் 200 சிப்பம் (1 சிப்பம் ரூ.1,100 வரை விற்கப்படுப்படுகிறது) அச்சுவெல்லம் தயாரிக்கலாம்.பழங்காலத்தில் கரும்பில் இருந்து சாற்றை எடுக்க மாடுகளை பயன்படுத்தினர். ஆனால் தற்போது அறிவியல் வளர்ச்சி காரணமாக மோட்டாரை பயன்படுத்தி கரும்பில் இருந்து சாறு எடுக்கிறோம். இதன்மூலம் வேலையாட்களின் தேவை குறைகிறது. நேரமும் மிச்சப்படுகிறது.
முதலில் கரும்பில் இருந்து சாற்றை எடுத்து குழாய் மூலமாக ஒரு தொட்டியில் சேகரிப்போம். பின்னர் அந்த தொட்டியில் இருந்து அச்சுவெல்லம் தயாரிப்பதற்காக உள்ள கொப்பரையில் ஊற்றுவோம். அச்சுவெல்லம் தயாரிக்க 90,120,150,210 கிலோ கொள்ளளவுகொண்ட கொப்பரைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் குறிப்பாக 210 கிலோ கொப்பரையை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.கொப்பரையில் ஊற்றப்படும் சாறு 2 முதல் 3 மணி நேரம் வரை நன்றாக காய்ச்சப்படும்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இங்கிருந்து அனுப்பப்படுகிறது’’ என்றார்.‘ரொம்ப காலமாகவே ஒரே மாதிரியாக அச்சு வெல்லத்தின் வடிவம் இருக்க என்ன காரணம்?’ என்று அவரிடம் கேட்டபோது..‘‘அச்சுவெல்லம் தயாரிப்பதற்காக பயன்படும் அடிக்கட்டைகள் பழனிக்கு அருகே உள்ள உடுமலைப்பேட்டையில் இருந்து வருகிறது. முதன்முதலில் வெல்லப்பாகினை காய்ச்சி, அதனை உலர வைத்து நாட்டு சர்க்கரை தூளாக விற்பனைக்கு அனுப்புவோம். 1965ம் ஆண்டிற்கு பிறகு தான் கட்டையில் பாகினை ஊற்றி அச்சுவெல்லம் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவது நடைமுறைக்கு வந்தது. அடிக்கட்டை முறையில் அச்சுவெல்லம் தயாரிப்பது எளிது என்பதால் இந்த முறையே நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த அடிக்கட்டைகள் தயாரிக்கும் தொழிலாளர் களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் அச்சுவெல்ல கட்டையின் அச்சுவடிவம் மாறாமலே இருக்கிறது’’ என்றார்.அச்சு வெல்லம் தயாரிக்கும் பணியில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. அதற்கான காரணத்தை மகாளிபுரம் லதா விளக்குகிறார்:‘‘கரும்பு வெட்டுதல், வெட்டிய கரும்புகளை டிராக்டரில் ஏற்றுதல் ஆகிய பணிகளை மட்டுமே பெண்களாகிய நாங்கள் செய்கிறோம். கரும்பில் இருந்து சாறு எடுத்தல், பாகு காய்ச்சுதல், அடுப்பில் தீ மூட்டுதல், மரத்தொட்டியில் இருந்து பாகினை அடிக்கட்டையில் ஊற்றுதல், அடிக்கட்டையில் இருந்து அச்சுவெல்லத்தை பிரித்து எடுத்தல், எடை போடுதல் போன்ற பணிகளை எல்லாம் காலங்காலமாக ஆண்களே செய்துவருகிறார்கள்.இவை எல்லாம் சற்று கடினமான வேலைதான்.
கொப்பரையில் ஊற்றப்படும் கரும்புச்சாறு நன்கு கொதிக்க 2 முதல் 3 மணி நேரமாகும். கரும்புச்சாறு சூடேற, சூடேற அதில் இருந்து வெளியேறும் தூசிகளை இரும்பு கரண்டியை பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும். அந்த கரண்டி அதிக எடையுடன் இருக்கும். நன்கு கொதித்த பிறகு 4 பேர் சேர்ந்து 210 கிலோ எடையுள்ள கொப்பரையில் உள்ள பாகினை மரத்தினால் ஆன தொட்டியில் ஊற்றுவார்கள். பின்னர் அச்சுவெல்லம் தயாரிப்பதற்காக உள்ள அடிக்கட்டையில் ஊற்றி, சிறிது நேரம் கழித்து கட்டையை தலைகீழாக கவிழ்த்து, அதன் மேல் கட்டையை கொண்டு அடிப்பர். அப்போது தான் அடிக்கட்டையில் உள்ள வெல்லம் அதில் இருந்து வெளியே வரும். இந்த பணிகளை எல்லாம் பெண்கள் செய்வது சற்று சிரமம்’’ என்கிறார், அவர்.
பக்குவம்தான் முக்கியமுங்க..
கொப்பரையில் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க கரும்பு பால் கொதித்து வற்றத் தொடங்கும்.பின்பு கரும்பு பால் இறுகி தங்க நிறத்தில் ஜொலிக்கும். காய்ச்சும் போது கரும்பில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக மட்டி, குருணை சோடா, ஆர்.பி. சோடா போன்றவற்றையும், கெட்டியாக டிகோலைட் என்ற பொடியையும், நிறம் பெற சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட பொருட்களை கொப்பரையில் சாற்றை ஊற்றிய 15 நிமிடத்திற்குள் சேர்க்க வேண்டும். நன்கு பதமான நிலைக்கு வெல்லம் வந்த பிறகு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.சரியான பதத்திற்கு வந்த பிறகு மரத்தினால் ஆன தொட்டியில் காய்ச்சிய வெல்லப்பாகை கொட்டி ஆற விட வேண்டும்.
பின்னர் அச்சுவெல்லத்திற்கு உரிய அச்சுப்பலகையில் வெல்லப்பாகு ஊற்றப்படுகிறது. 15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் விற்பனைக்கு பக்குவமான அச்சுவெல்லம் தயாராக இருக்கும்.இவ்வாறு 2 மணி நேரத்திற்குள் அச்சுவெல்லம் தயாராகி விடும். அச்சுவெல்லம் தயாரிக்கும் போது பக்குவம் தான் முக்கியம். பக்குவம் தவறினால் சுவையான அச்சுவெல்லம் கிடைக்காது.
ஏனெனில் அச்சுவெல்லத்தின் சுவையை பக்குவம் தான் நிர்ணயிக்கிறது. ஒரு குழுவினர் ஒரு நாளில் 1,000 முதல் 1,500 கிலோ வரை அச்சுவெல்லம் தயாரிக்கலாம். அச்சுவெல்லத்தின் நிறத்தை பொறுத்துதான் விலை நிர்ணயிக்கப்படுகிறது.