ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!
உணவு சமைத்தல், ஓட்டல் நிர்வாகம், வரவேற்பு மற்றும் உபசரணை, சமையல் பொருட்களின் கலைநயம் என ஏராளமான பிரிவுகளுடன் சமைத்தல் தொடர்பான படிப்புகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. பேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில், உணவு சார்ந்த வீடியோக்களும், புதுப்புது உணவகங்கள் சார்ந்த வீடியோக்களும்தான் நிறைந்திருக்கின்றன.
அந்தளவிற்கு, உணவு கலாசாரம் மக்களிடையே அதிகம் பெருகி இருக்கிறது. பாரம்பரிய உணவுகள், மேற்கத்திய உணவுகள், ஆசிய வகைகள் என பெருநகரங்களின் சந்து பகுதிகளை, பெரிய மற்றும் சிறிய ஓட்டல்கள் அலங்கரிக்கின்றன. இந்த உணவு கலாசாரம் எதிர்காலத்தில், அதிக வரவேற்பை பெறும் என்பதினால், உணவு கலை சம்பந்தமான படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன.
குறிப்பாக உணவு சமைத்தல் (கேட்டரிங்), ஓட்டல் நிர்வாகம் (மேனேஜ்மெண்ட்), வரவேற்பு மற்றும் உபசரணை (ஹாஸ்பிட்டாலிட்டி), சமையல் பொருட்களின் கலைநயம் (கல்னரி) என ஏராளமான பிரிவுகளுடன் சமைத்தல் தொடர்பான படிப்புகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. சமையல் தொடர்பான படிப்புகளை படிப்பதினால், நட்சத்திர உணவகப் பணியில் தொடங்கி, சுயமான தொழில் முனைவோர் வரை பணி வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ளலாம். எளிமையான பாடத்திட்டத்துடன், ஏட்டுக் கல்வியைவிடச் செயல்திறனுக்கே முக்கியத்துவம் என்பதால் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான மவுசு அதிகரித்திருக்கிறது.
கேட்டரிங் படிப்பு என்பது சமையல் கலை, பரிமாறும் கலை, இல்லப் பராமரிப்பு, வரவேற்பு மற்றும் உபசரிப்பு ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அரசுக் கல்வி நிறுவனங்களில், இவை நான்கையும் அடிப்படையாக கொண்டே, பாடத்திட்டம் வகுத்திருக்கிறார்கள். குறிப்பாக, சென்னை தரமணியில் அமைந்திருக்கும் மத்திய அரசின் நிறுவனமும், திருச்சி துவாக்குடியில் அமைந்திருக்கும் மாநில அரசின் பயிற்சி நிறுவனமும் இவை நான்கையும் அடிப்படையாக கொண்டு, பாடம் நடத்துகின்றன.
இங்கு சேர்ந்து படிக்க, அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அப்படி அதில் தேர்ச்சி பெற்றால், அங்கு கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மெண்ட் சார்ந்த 3 வருட டிப்ளமோ, பட்டப் படிப்புகளை படிக்கலாம்.
தற்போது ஐ.டி.ஐ. பாணியிலான சான்றிதழ் வழங்கும் தொழில் படிப்புகளும் பரவலாகி வருகின்றன. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களும், இதில் சேர்ந்து பயிலலாம் என்பதால், பள்ளிக் கல்வியில் தடுமாறியவர்களும் தங்களது தனித்திறனை வளர்த்துக்கொண்டு இத்துறையில் ஜொலிக்க முடியும். பாடத்திட்டத்தில் செய்முறையே பிரதானமாக இருக்கும். சொற்பமான எழுத்துத் தேர்வும்கூட செய்முறை அறிவையே அடிப்படையாகக் கொண்டது என்பதால், இந்த மாணவர்களுக்குப் படிப்பு ஒரு சுமையல்ல. தனித்திறமையே அடிப்படை ஒருவர் படித்தது அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனமானாலும் சரி, அவர் பெற்றது டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் என எதுவானாலும் சரி, இந்தத் தகுதிகளைவிட அவரது துறை சார்ந்த செய்முறைத் திறனே அவரது வேலைவாய்ப்பைத் தக்கவைக்கும்.
அதேபோல அதற்கடுத்த பதவி, ஊதிய உயர்வுகளுக்கு தனித்திறமையே அடிப்படை.எனவே, கேட்டரிங் துறை மாணவர்கள் தங்களுக்கெனச் சிறப்புத் திறமைகளையும் தனி அடையாளத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குத் துறையின் மீதான ஆத்மார்த்த ஈடுபாடும், ஆர்வமும், விடாமுயற்சியும் பயிற்சியும் கைகொடுக்கும்.
கேட்டரிங் படிப்புகள் வெறுமனே சமையலறை, பரிமாறும் மேஜையுடன் முடிந்துவிடுவதல்ல. படிக்கும் காலத்தில் கூடுதலாகப் பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்வது எதிர்காலத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். இந்தக் கூடுதல் திறன்களில் ஆங்கில அறிவு மிகவும் அவசியமானது. விரும்பினால் இந்திய, சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். கம்ப்யூட்டர் இயக்குதல், இணையத்தில் உலாவுதல், துறை சார்ந்த கணினி பயன்பாட்டைக் கற்றுக் கொள்ளுதலும் அவசியம். இவை பின்னாளில் நட்சத்திர விடுதிகள், சொகுசு கப்பல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் தம்மை உயர்த்திக்கொள்ள உதவும்.
கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட படிப்புகளை முடிக்கும் அனைவருக்கும் நட்சத்திர விடுதிகளில் வேலைவாய்ப்பு கிடைத்து விடாது. ஆனால், அவற்றுக்கு நிகராகப் பல்வேறு வேலைவாய்ப்புகள் இன்று வளர்ந்து வருகின்றன. தம்முடைய திறமை, ஆர்வம் ஆகியவற்றைப் பரிசீலித்து, இதர கிளைத் துறைகளில் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.