“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.” – பாரதியார்
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம், மார்ச் 8 அன்று கொண்டாடப் படுகிறது. 1900 ஆண்டுகளில் இருந்தே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் ஆண்களை விட அதிக நேரம் பெண்களே உழைக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
சராசரியாக ஆண்கள் 7 மணி நேரம் உழைத்தாலும், பெண்கள் 9 முதல் 11, மணி நேரம் உழைக்கிறார்களாம். அதுமட்டுமா இந்தியாவில் பாலின பேதம் இன்றும் ஊதிய ரீதியாக தொடர்கிறது. ஆண்களை காட்டிலும் 34 சதவீதம் குறைந்த ஊதியத்தை பெண்கள் பெறுகிறார்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பு கூறுகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உரிமைகள் சம அளவில் இன்னும் வந்துவிடவில்லை. சர்வதேச மகளிர் தினம் என்பது எந்த நாடு, குழு அல்லது அமைப்புக்கும் பிரத்தியேகமானதல்ல. அந்த நாள் ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமானது. பெண்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும்.
நம்ம திருச்சியில எத்தனையோ சாதித்த பெண்கள் வரலாறு படைத்திருக்கிறார்கள். இருந்தாலும் தன் கையே தனக்கு உதவி என்ற சொல்லுக்கேற்ப இன்று மக்களின் மனதை பறித்த சில பெண்களையும் குறிப்பிட வேண்டும். அந்த வரிசையில் வந்தவர்களை பார்ப்போம்.
மாநகரின் முதல் பெண் போலீஸ் கமிஷனர்
திருச்சி மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளில் 32வது மாநகரின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமையை பெறுகிறார் சத்தியபிரியா. கடந்த 1997ம் ஆண்டு வேலூர் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார்.
2006ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சேலம், திருச்சி மாநகரங்களில் சட்டம், ஒழுங்கு துணை கமிஷனர், நாமக்கல் மாவட்ட எஸ்பி என பணிபுரிந்தார். இவரது மெச்சத்தக்க பணியை பாராட்டி 2020ம் ஆண்டு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கட்டுமானத்துறையில் கரை கண்டவர்
கட்டுமான துறையில் உள்ள பாசிடிவ், நெகடிவ் எல்லாவற்றையும் 3 பொறியாளர்களை வைத்து சமாளித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறார் டெக்னி கெமி நிறுவன இயக்குனர் சசிகலா. இவரது தொழிற்சாலையில் 25 பெண்களுக்கு மேல் பணிபுரிகின்றனர்.
நிறுவன தயாரிப்புகளான கெமிக்கல் குறித்து ஆரம்பத்தில் தடுமாறிய இந்நிறுவனத்தை தன் தொடர் முயற்சியாலும், திடமான நம்பிக்கையாலும் கட்டமைத்திருக்கிறார் சசிகலா. தங்களது நிறுவன தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்து உயர்த்தியிருக்கிறார் சசிகலா.
ஆரோக்கியம் காக்கும் அரசி
மண் மனம் மாறாத ஆரோக்கிய உணவு வகைகள் தயாரிப்புடன் உருவானது “செல்லம்மாள் மண் பானை உணவகம்” இதன் உரிமையாளர் செல்வி ஆடம்பரத்தை விடுத்து, ஆரோக்கியத்தில் ஆர்வம்கொண்டு மண்பாண்டங்களிலேயே சமைத்து குட்டி குட்டி மண் குடுவையிலே உணவு பரிமாறுகிறார்.
பழமையின் பக்குவப்புரிதலை கொண்ட இவர் நம் இளம் தலைமுறையினர் பலரும் பார்த்திராத பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய வகைகளை சமைப்பவர். தன் உணவகத்தில் பெண்களை மட்டும் பணியமர்த்தியிருக்கிறார்.
சட்டப் படிப்பில் மாநில முதலிடம்
2019ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாக சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தான் படித்த திருச்சி அரசு சட்டக்கல்லூரியிலே உதவி பேராசிரியராக நியமனம் பெற்றார்.
தற்போது தமிழக மாநில நீதிமன்ற குழு உறுப்பினராக உள்ளார். மேம்பாட்டிற்காக மாநில மற்றும் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றங்கள் நடத்திட பணியாற்றுகிறார். சர்வதேச மாதிரி நீதிமன்றங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதற்கு உதவி புரிகிறார்.
சமூக விழிப்புணர்வு தரும் வழக்கறிஞர்
தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்து புரட்சி செய்தவர் வழக்கறிஞர் ஜெயந்திராணி. சேலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் பயிலும்போது, எத்திராஜ் பெண்கள் கல்லூயில் தேர்தலில் போட்டியிட்டு துணைத் தலைவராக வெற்றி பெற்றவர்.
“Parents Trust” என்ற அமைப்பை ஏற்படுத்தி வளர் இளம் பருவ மாணவிகளுக்கும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
உடலில்தான் உள்ளத்தில் இல்லை.
சிறு குழந்தையாக இருந்தபோது வந்த காய்ச்சலால் தன் கால்களின் நடக்கும் சக்தியை இழந்த கிருத்திகா பாஸ்கரன் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பிசிஏ எம்எஸ்சி முடித்துள்ளார். தன்னால் தனியாக நடக்க முடியாமல் போனதாலேயே தன்னுடைய மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு சிதைந்தது போனது.
இருந்தாலும் விடாமுயற்சியால் தற்போது இணையதள வடிவமைப்பாளாராக இருக்கிறார். ஒருவரின் கனவுகளையும் விருப்பத்தையும் புரிந்துகொள்ளும் குடும்பம் கிடைத்தால் எப்போதும் மகிழ்ச்சிதான் என்கிறார்.
மனநிறைவை தரும் தொழில்
திருச்சியில் கே.எம்.எஸ். என்ற பெயரில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார் துர்கா. துர்கா, ஜூஸ் தயாரிக்க கெமிக்கல் எதுவும் கலப்பதில்லை. ரோஸ்மில்க் தயாரிக்க பன்னீர் ரோஜா வாங்கி வெயிலில் காய வைத்து பவுடர் செய்தும், பாதாம் பாலுக்கு பாதம் அரைத்து மஞ்சள் கலருக்காக சிறிதளவு குங்குமப்பூ சேர்த்தும் தயாரிக்கிறார்.
தரமான பொருளையே மக்களுக்கு தருகிறோம். எனது மனதிருப்தியே எல்லா காலங்களிலும் மனநிறைவாய் இருக்க செய்கிறது” என்கிறார்.
சோதனையை கடந்த முன்னோடி பெண்மணி
கணவர் ஒரு எச்ஐவி நோயாளி. தனது பெண் குழந்தைக்கு எச்ஐவி தொற்று, 2வது குழந்தை பிறந்து 11வது நாளில் கணவர் இறந்தார். அவர் இறந்து 30வது நாளில் இரண்டாவது குழந்தையும் இறந்தது.
திருச்சி மாவட்ட எச்ஐவி ஆண்கள் மற்றும் பெண்கள் மறுமணம் செய்ய விரும்புபவர்களுக்கு சிகிச்சையினை மேற்கொள்ள கூறி, 27 எச்ஐவி தம்பதியினர்க்கு திருமணம் நடத்தி, அவர்கள் ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்துள்ளனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளிரியல் துறை “முன்னோடி பெண்மணி“ விருது வழங்கி கவுரவித்தது.