வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா தான் முதல் சாய்ஸ்
அடிப்படை கட்டமைப்பு ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்குவகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக இந்தியா உள்ளது.
குறிப்பாக மின்னணு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித்துறையில் சீனா சற்று பின்தங்கியுள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பிரதான தேர்வாக இந்தியாவும் வியட்நாமும் உள்ளது இது குறித்து கோல்ட்மேன் சாச்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பொருளாதார நிபுணர் சாந்தனு சென்குப்தா கருத்து தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவில் 50 முதல் 55 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கின்றனர்.
பெருந்தொற்று நேரத்தில் கூட வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பிரதான தேர்வாக இந்தியா இருந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை அளிக்கும் திட்டத்தால் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவின் பக்கம் திரும்பி வருகின்றனர்
எனினும் இந்தியாவின் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்வதாக எச்சரித்துள்ள அவர்,அதையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
வரும் காலத்தில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த உள்ள நிலையில் இதன்தாக்கம் இந்தியாவில் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நிகழ்வுகளின் பாதிப்புகள் இந்திய சந்தைகளில் பிரதிபலிக்கும் என்றும் சென்குப்தா தெரிவித்துள்ளார்.