வீட்டுமனையில் முதலீடு! கார்னர் பிளாட்டில் லாபம் பார்க்கலாம்
வீட்டுமனை லேஅவுட்டுகளில் இரண்டு அல்லது மூன்று திசைகள் சந்திக்கும் மூலைப் பகுதிகளில் அமைந்தவை ‘கார்னர் பிளாட்டுகள்’ எனப்படுகின்றன. பொதுவாக, புதிதாக லே அவுட் போடும்போது, பல புரொமோட்டர்கள் கார்னர் பிளாட்டுகளுக்கெனத் தனி விலை வைப்பதில்லை. அதே நேரத்தில், புதிய மனைப்
பிரிவுகளில் இந்த மனைகளே முதலில் விற்பனை ஆகின்றன.
இதற்கு லே அவுட் புரொமோட்டர் அதிக விலை சொன்னாலும், கார்னர் மனைக்கு அதிக விலை கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. காரணம், அந்தப் பகுதி நல்ல வளர்ச்சி அடையும்போது கடை வைத்து கூடுதல் வருமானம் பார்க்கலாம் அல்லது கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு நல்ல லாபம் பார்க்கலாம்.
மறுவிற்பனையில் கூடுதல் விலை…
மனைகளை மறுவிற்பனை செய்யும்போது, மற்ற மனைகளைவிட கார்னர் பிளாட்டுகள் விலை சதுர அடிக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை கூடுதல் விலைக்குப் போகும். இது கார்னர் வீடுகளுக்கும் பொருந்தும். பொதுவாக, முதலீட்டு நோக்கில் மனை வாங்குபவர்கள் கார்னர் பிளாட்டுகளைத் தேர்ந்தெடுத்து வாங்குகிறார்கள். அடுத்து, உடல்நலனில் மற்றும் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டவர்கள் அதற்கு இரண்டு திசைகளிலிருந்து நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்கும் என்கிற கருத்தில் கார்னர் பிளாட்டைத் தேர்வு செய்கிறார்கள்.
மூன்று பக்கமும் ரோடு வசதி…
ஒரு மனை அல்லது வீட்டுக்கு மூன்று பக்கமும் சாலை வசதி இருந்தால், அதன் விலை இன்னும் அதிக விலைக்குப் போக வாய்ப்பிருக்கிறது. காரணம், மூன்று பக்கங்களிலும் கடைகளைக் கட்டி வாடகைக்கு விடலாம். அல்லது ஒரு பக்கம் வீட்டுக்குச் செல்லும் பாதையாக வைத்துக்கொண்டு, இரண்டு புறங்களில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு கூடுதல் வருமானம் பெறலாம். மனைப் பரப்பு மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில், நான்கு பக்கம் சாலைகள் இருக்க வாய்ப்பு உண்டு. இது சூப்பர் மார்க்கெட்டுகள், தியேட்டர்கள் போன்றவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.
மிக அதிக தொகையை முதலீடு செய்து பிற்காலத்தில் நல்ல லாபம் பெற நினைப்பவர்கள், ஒரு லே அவுட்டில் பல இடங்களில் மனை வாங்குவதற்குப் பதிலாக, ஒரு தெருவில் வரும் 5, 6 மனைகளைச் சேர்த்து மொத்தமாக வாங்கலாம். அப்படி உங்களால் வாங்க முடிய வில்லை எனில், உறவினர்கள், நண்பர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஒரு தெருவை மொத்தமாகவோ, தனித்தனியாகப் பிரித்தோ வாங்கலாம். பிற்பாடு விற்கும்போது எல்லோரும் சேர்ந்து விற்றுக் கூடுதல் லாபம் பார்க்க முடியும். இதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
கூடுதல் வசதி..!
கார்னர் பிளாட் எனில், கார் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வசதியாக இருக்கும். ஒரு பக்கமுள்ள சாலையின் வழியாக காரை வீட்டுக்குள் கொண்டு சென்று நிறுத்தலாம். எடுக்கும்போது பின்புறமாக காரை ஓட்டி கஷ்டப்பட்டு சாலைக்குக் கொண்டு வருவதற்குப் பதில், இன்னொரு சாலை வழியாக காரை எளிதில் வெளியே கொண்டு வர முடியும்.
பிரச்சனையும் இருக்கு..
கார்னர் பிளாட் என்கிறபோது மற்ற மனைகளை விட அதிகமான போக்குவரத்து இருக்கும். இதனால், அதிக சத்தம் எழ வாய்ப்பிருக்கிறது. மேலும், வீட்டுக்குள் அதிக தூசி மற்றும் புகை வரும் வாய்ப்பிருக்கிறது. இதனால் வீட்டை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல்நலம் சார்ந்த சில தொந்தரவுகளும் வர வாய்ப்பு உண்டு என்பதை மறக்கக் கூடாது.
இதெல்லாம் பிரச்சனையே இல்லை. பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்கத்தானே கார்னர் பிளாட்டை வாங்குகிறோம் என்கிறவர்கள் கார்னர் பிளாட்டைத் தாராளமாகத் தேர்வு செய்து வாங்கலாம்!