“மருத்துவ சுற்றுலா” 21ம் நூற்றாண்டுக்கான புதிய வர்த்தக சந்தை!
ஒரு நாட்டுக்கு அயல்நாட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்வது மருத்துவ சுற்றுலா வர்த்தகமாக பார்க்கப்படுகிறது. இதில் ஆண்டுக்கு 80 மில்லியன் அமெரிக்க டாலர் புழங்குகிறது. உலகின் மொத்த சுற்றுலா வர்த்தகத்தில் இதன் பங்கு 3 சதவீதம். ஆண்டு வளர்ச்சி ஏறத்தாழ 20 சதவீதம். 21ம் நூற்றாண்டுக்கான புதிய வர்த்தக சந்தை இதுவே.
வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, தென்கொரியா, தைவான், துருக்கி, மெக்சிகோ, பிரேசில், கோஸ்டாரிக்கா போன்ற நாடுகள் சந்தை போட்டியில் ஈடுபடுகின்றன.
கடந்த 2016ம் ஆண்டின் உலக மருத்துவ சுற்றுலா வர்த்தகம் 59 மில்லியன் அமெரிக்கன் டாலராகும். இந்திய வர்த்தகமோ 3.9 அமெரிக்க டாலராகும். இதுவே 2020ம் ஆண்டில் 7.5 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்தது. வளர்ந்த நாடுகளைவிட 60 முதல் 90 சதவீதம் சிகிச்சை கட்டணம் இந்தியாவில் குறைவு. இந்தியாவின் 2 லட்சம் மருத்துவமனைகள், 1.6 லட்சம் துணை மையங்கள், 400 மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் கொண்ட போட்டி மிக்க மருத்துவ கட்டமைப்பே கட்டண குறைவிற்கு காரணம். அத்துடன் 1.6 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த மருத்துவ வர்த்தகத்தின் மையங்களாக புதுடெல்லி, பெங்களூர், சென்னை நகரங்கள் திகழ்கின்றன. பல், கண் மருத்துவம், தோல்வியாதி, உடல்பருமன், முடி நோய், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற இந்திய சிகிச்சைகள் உலக கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. இந்தியா வரும் வெளிநாட்டவர்களில் 29.96 சதவீதம் பேர் பெங்களூர் விமான நிலையத்தில் இறங்குகிறார்கள்.
இத்துறையின் கேந்திரமாக பெங்களுர் விளங்கினாலும், கண் சிகிச்சையில் ஏனோ டெல்லி மருத்துவனைகளே கல்லா கட்டுகின்றன. இந்த வர்த்தகத்தில் சென்னைக்கு மூன்றாவது இடமே மிஞ்சியது. பல் சிகிச்சைக்கு ஒரு மாதத்திற்கு புதுடெல்லி வரும் வெளிநாட்டவர்கள் 13500 பேர். தலைமுடிக்காக வருபவர்கள் 16200 பேர். இது சற்று ருசிகரமான தரவுகளே.
கடந்த 2019ம் ஆண்டு இந்திய சுற்றுலா வருவாய் ரூ.2,11,661 கோடி. சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் 1,09,30,355 பேர். இந்திய மருத்துவ கட்டமைப்பு பற்றி வேர்ல்டு டிராவல் மார்ட், ஐ.டி.பி, பெர்லீன், அரேபியன் டிராவல் மார்ட் போன்ற சர்வதேச தளங்கள் மூலம் இந்திய சுற்றுலா கழகம் கொண்டு சேர்க்க தவறியதை, கொரானா நோய் கொண்டு சேர்த்து விட்டது. ஆசிய மருத்துவ சுற்றுலாவிற்கான சந்தை இந்தியாவே..!. விரைவில் உச்சம் தொடும்.
-மன்னை.மனோகரன்