பகுதி நேரமாக சொந்த தொழில்
சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை, பணியில் இருக்கும் சிலருக்கு எழக்கூடும். ஆனாலும் பணியை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய பலர் தயாராக இருப்பதில்லை.
சிலர் சம்பளத்துக்கு பணிபுரிந்து கொண்டே பகுதி நேரமாக சொந்தத்தொழில் செய்வதுண்டு. அவ்வாறு செய்து தொழிலில் ஓரளவு வருமானம் கிடைக்கத் தொடங்கி யவுடன் சம்பள பணியை விட்டுவிடுகின்றனர். இன்னும் சிலருக்கு பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்குரிய வழிமுறைகள் தெரியாது. உங்களுக்கு பணி பகலில் என்றால்,உங்கள் பணியையும், பகுதி நேர தொழிலையும் ஒரே நேரத்தில் செய்ய முற்பட வேண்டாம். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின் உங்களின் தொழிலை கவனியுங்கள். அந்த தொழில் குறித்த தகவல்களை அப்டேட் செய்து கொள்வது அவசியம். பகுதி நேர தொழில் சிறிய அளவில் மட்டும் வருமானம் தருகிறது என்று சொன்னால் நிரந்தர வேலையை விடுவது பற்றி சிந்திக்காதீர்கள்.
நிகழ்காலத்துக்கும்,எதிர்காலத்துக்கும் பகுதி நேர தொழில் வளமையை தரும் என்று நீங்கள் உறுதியாக நம்பினால், நிரந்தர வேலையை விட்டு விட்டு, பகுதிநேர தொழிலை நிரந்தர தொழிலாக ஆக்கிக் கொள்ளலாம். ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் போன்ற சேவைத் துறையில் பகுதி நேரமாக தொழில் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன.இவற்றில் பணி செய்தும் கூடுதல் வருமானம் பெறலாம்.