சிறப்புத் தேவையுள்ள குழந்தைக்கு உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் தர வேண்டிய பாதுகாப்பு
பெற்றோராகிய ஒவ்வொருவருக்கும் இந்தக் கவலை எப்போதும் நிச்சயமாக இருக்கும். நாம் இல்லாவிட்டால் நம் குழந்தைகளின் நிலை என்னவாகும், யார் அவர்களை கவனித்துக் கொள்வார்கள் என்ற கவலை மேலோங்கியிருக்கும்.
குறிப்பாக, அலுவலகப் பணி மற்றும் இதர காரணங்களுக்கா விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் குழந்தை களுக்கான தேவைகளை கவனித்துக் கொள்வதே நமக்கு பெரிய விஷயமாக தோன்றும்.
சாதாரண குழந்தைகளுக்கே இப்படி என்றால், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். வாழ்க்கையில் எந்த நேரத்திலும் அவர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு என்பது தேவையாக இருக்கும். பூமியில் பிறந்த யாருக்கும் அவர்களது வாழ்நாள் எதுவரைக்கும் என்பது மிக சரியாக தெரிந்திருக்காது.
அப்படி இருக்கையில், பெற்றோரின் காலத்திற்குப் பிறகு வாழ உள்ள சிறப்பு குழந்தைகளின் தேவைகளை யார் கவனித்துக் கொள்வார்கள். அத்தகைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது அல்லவா. அதற்காகத்தான் பெற்றோராகிய நாம் சில முன்னேற்பாடுகளை செய்வதன் மூலமாக நம் குழந்தைக்கான வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
உயில் எழுதி வைக்கலாம்
உயில் எழுதுவதற்கு முன்னால் கட்டாயம் இதை செய்தாக வேண்டும்.உங்கள் சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன, அது தொடர்பான ஆவணங்களை எங்கு வைத்துள்ளீர்கள், உங்கள் முதலீடுகளை எங்கு வைத்துள்ளீர்கள் என்ற தகவல்களை சேகரிக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் எழுதும் உயிலை செயல்படுத்த போகும் நபர் யார் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அந்த நபர் தான் நீங்கள் உயிலில் எழுதுகின்ற படி உங்கள் சொத்துக்களை பிரித்துக் கொடுக்கப் போகும் அதிகாரம் உள்ளவர் ஆவார். குறிப்பாக, நீங்கள் தேர்வு செய்யும் நபர், உங்களை விட நீண்ட காலத்திற்கு வாழ போகின்ற இளம் நபராக இருக்க வேண்டும்.
டிரஸ்ட்டியை நியமிக்கலாம்
பெரும்பாலான சமயங்களில் பெற்றோர் தங்கள் உடன் பிறந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களில் ஒருவரை தங்கள் குழந்தையை பார்த்துக் கொள்வதற்கான டிரஸ்டியாக நியமிக்கின்றனர். அப்படி தேர்வு செய்யும் போது, அந்த டிரெஸ்டி நபர் உண்மையாகவே உங்கள் குழந்தை மீது அன்பு செலுத்துபவரா, உங்கள் குழந்தையை கவனித்துக் கொள்வதற்கு போதுமான நேரம் அவர்களுக்கு கிடைக்குமா என்பதையெல்லாம் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
டிரஸ்ட்டி தொடருவதை உறுதி செய்தல்
டிரஸ்ட்டிக்கான வரைவு ஆவணத்தை நீங்கள் தயார் செய்கின்ற போது, அந்த டிரெஸ்டி பிறகான காலத்தில் உங்கள் குழந்தைக்கான பாதுகாவலர் அல்லது டிரெஸ்டி யார் என்பதை நீங்கள் முன்னரே முடிவு செய்து, அந்த விவரங்களையும் ஆவணத்தில் குறிப்பிட வேண்டும்.
டிரெஸ்ட் மூலம் மேற்கொள்ளப் படும் முதலீடுகள் மற்றும் வரி நடவடிக்கைகளுக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்பதையும் தீர்மானிக்க வேண்டும். ஒரு சிலர் கார்ப்பரேட் ஒருவரை டிரெஸ்டியாக நியமனம் செய்து, நிர்வாக நடவடிக்கைகளை கவனித்து கொள்ள ஒரு அதிகாரியை நியமனம் செய்வார்கள்.
இன்னும் சிலர் தனிநபர்களை டிரெஸ்டியாக நியமனம் செய்தாலும், அவர்கள் உங்கள் குழந்தைக்கான பாதுகாவலராக இருந்து கொண்ட, கார்ப்பரேட் ஒருவரை டிரெஸ்டியாக நியமனம் செய்து கொள்வார்கள். எப்படி இருந்தாலும், ஒரு டிரெஸ்டியின் கடமை, உரிமை போன்ற விஷயங்களை நீங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும்.