திருச்சி மாவட்டம், ரோட்டரியின் ஆர்.எம்.பி.எஃப் பிரிவின் ஏழாவது பதவியேற்பு விழா திருச்சி, உறையூர் சாலை ரோட்டில் உள்ள லீ டெம்பிள் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி ரோட்டரியின் ஆர் எம்.பி.எஃப். பிரிவின் பிரிவு புதிய தலைவராக எம்.பார்த்தசாரதி, துணைத்தலைவராக கே.பி.கீர்த்தி, செயலாளராக வி.எஸ்.விஜய் நந்தகுமார் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுபம் பிரைட் கேரியர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுந்தர்ராஜ் கலந்து கொண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து தனது அனுபவங்கள் மூலம் எடுத்துரைத்தார். அப்போது அவர்,
“பணம் இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என்றால் இன்று அம்பானியும் அதானியும் வந்திருக்க முடியாது. நான் என்ன பண்ணினால் ஜெயிக்க முடியும், மற்றவர்களிடமிருந்து நான் என்னை எப்படி வேறுபடுத்திக் காட்ட முடியும் என்பதை யோசிக்க வேண்டும். உங்களை ஒரு பிராண்ட் அம்பாசிடராக வெளிக்காட்ட வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் உள்ள வித்தியாசம் வெறும் ஒரு சதவீதம் மட்டும் தான் இருக்கும். அது, வெற்றி பெற்றவர்கள் தங்களை, தங்கள் பொருட்களை சந்தையில் வித்தியாசப்படுத்திக் காண்பிப்பது.
நாம் பெரும்பாலும் மற்றவர்களைப் பார்த்து கொண்டே இருந்துவிட்டு நம்மை மறந்து விடுகிறோம். நாம் நம்மை நல்லவர்களாக காட்டிக் கொள்வதிலேயே நேரத்தை வீணடிக்கிறோம். அது தேவையில்லை. நாம் எதைச் செய்தாலும் நல்ல விதமாக செய்ய வேண்டும். அது தான் நம் அடிப்படைத் தகுதியாகும். வியாபாரத்தில் பொய் சொல்கிறோம். ஆனால் அதிலும் ஓர் உண்மை இருக்கிறது. சொல்வதை நாம் கொஞ்சம் பெரிதுபடுத்தி சொல்கிறோம், அவ்வளவே. பெருதுபடுத்தி சொன்ன பொய்யையே உண்மை ஆக்கிட வேண்டும். அவ்வளவு தான், நாம் வெற்றி பெற்று விடுவோம்.
இது தான் எல்லை என்று இல்லாமல், அடுத்து என்ன அடுத்து என்ன என சிந்திக்க வேண்டும். நம் நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியர்கள் நலனை கவனிக்காமல் நீங்கள் உங்கள் நிறுவனத்தை முன்னேற்ற முடியாது. பணியாற்றும் 10 ஊழியர்களில் 8 பேர் உங்கள் நிறுவனத்தில் நீண்ட நாட்கள் வேலை செய்கிறார்கள் என்றால் உங்கள் நிறுவனம் வளர்வதற்கு அதுவே முதல் தகுதியாகும். உழைப்பை ஒருங்கிணைக்கும் இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும்”. இந்நிகழ்ச்சியில் ஆர்.எம்.பி.எஃப் பிரிவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.