புலம் பெயர்ந்த தமிழர்கள் தொழில் தொடங்க ரூ.50 லட்சம்
வங்கி கடன் திருச்சி கலெக்டர் அறிவிப்பு
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
“கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு நீட் -எஸ்.ஐ.எம். என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தாய்நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமாகத் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்த முதல் தலைமுறை தொழில்முனைவோர் சுயமாகத் தொழில் தொடங்கிட வசதி வாய்ப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விழைவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருத்தல் அவசியம். அயல்நாடுகளில் பணி புரிந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் 21 வயதுக்கு மேல் 35 வயது வரையும் இருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான திட்ட மதிப்பீடுள்ள உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு வங்கிகள் மற்றும் தொழில் முதலீட்டுக் கழகம் வழியாக தகுதியுடைய தொழில் முனைவோருக்கு கடன் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
திட்ட மதிப்பீட்டின் நிலையான மூலதனத்தில் 25 சதவீதம், ரூ.50 லட்சம் வரை மூலதன மானியமாகவும், வங்கிக் கடனை தவணை தவறாமல் திருப்பிச் செலுத்துவோரை ஊக்குவிக்கும் பொருட்டு வட்டியில் 3 சதவீதம் மானியமாக வும் அரசால் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு வகைப் பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
திருச்சி மாவட்டத்திற்கு நடப்பு நிதி ஆண்டில் இச்சிறப்பு திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பணி புரிந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு குறைந்தபட்ச இலக்கீடாக 8 நபர்களுக்கு ரூ.64 லட்சம் மானியம் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விலிருந்தும், தொழில்முனைவோர் பயிற்சியிலிருந்து ஆகஸ்ட் 31ம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி www.msmeonleine.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, திருச்சி&620001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431-2460331, 2460823, 89255 34027 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.