அறிய வேண்டிய விஷயங்கள்
இந்து வாரிசுரிமைச் சட்டம்…
ஒருவர் உயிருடன் இருக்கும் போதே பாகப்பிரிவினை செய்யவில்லை; இறந்தபிறகு அவரது சொத்துகளைப் பிரித்துக்கொள்வதற்கான உயிலையும் எழுதவில்லை எனில், இறந்தவரின் சொத்துகள் அவருடைய வாரிசுகளுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி சென்றடையும். குடும்பத்தில் தலைமகன் இறந்தபிறகு சொத்துகளைப் பிரிப்பதாக இருந்தாலோ, விற்பதாக இருந்தாலோ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவிப்பது அவசியம்.
ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாமல் போகலாம். அதேபோல், குறிப்பிட்ட ஒரு வாரிசுக்குத் தெரியாமல் சொத்துகளை விற்றாலும் பின்னாளில் பிரச்னைகளைக் கொண்டு வரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. சொத்துப் பிரிவினையில், சொத்து விற்பனையில் வாரிசுகள் ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், பாகப்பிரிவினையோ, சொத்து விற்பனையோ ரத்து செய்யப்படலாம்.
தனியார் நிறுவன டெபாசிட்டுக்கு பாதுகாப்பு?
“கம்பெனி பிக்ஸட் டெபா சிட் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் டுக்கு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு கிடையாது. ஆகவே, நீங்கள் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தில், எந்த வங்கிசாரா நிதி நிறுவனத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனம் மிக அதிகமான தரக்குறியீட்டைப் (credit Rating) பெற்றிருக்கிறதா என்பதைப் பாருங்கள். அப்படிப் பெற்றிருந்தால், உங்களது முதலீடு ஓரளவு பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லலாம்.
அதிக வருமானம் என்பதை மட்டும் மனதில் கொண்டு செயல்படாமல், நிறுவனத்துக்கான தரக்குறியீடு எப்படி இருக்கிறது என்று அவசியம் பார்த்து, முடிவெடுப்பதுதான் உங்கள் பணத்துக்கான பாதுகாப்பைத் தரும்.
பெண்களுக்கு சொத்துரிமை…
1956 இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி பரம்பரை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2005-ம் ஆண்டில்தான் இதில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, தந்தை வழி பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு எனக் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இந்தச் சட்டத்திலேயே பல குழப்பங்கள் இருந்தன. தந்தை உயிரோடிருந்தால்தான் பெண் வாரிசுகள் பங்கு கோர முடியும் என்றிருந்தது. முன்பே பாகப்பிரிவினை செய்தாகிவிட்டது என்று வாய்மொழியாகச் சொல்லி ஏமாற்றுவது போன்ற சிக்கல்கள் முட்டுக்கட்டையாக இருந்தது. பின்னர் பல வழக்குகள், அதில் வந்த தீர்ப்புகள் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தன. பெண் வாரிசுகள் சொத்தில் பங்கு வேண்டாம் என்று கூறுகிறபட்சத்தில் அதை எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்துவிட்டு, அந்த சொத்துகளை ஆண் வாரிசுகள் பிரித்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 1989-ல் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின்படி, பெண்கள் அனைவருமே பரம்பரை சொத்தில் உரிமை கோரலாம் என்ற நிலை வந்தது. ஆனால், இதில் 25.3.1989-க்குமுன் திருமணம் ஆன பெண்கள் பரம்பரைச் சொத்தில் உரிமை கோர முடியாது. அதே போல, அதே தேதிக்கு முன்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்திலும் பெண்கள் உரிமை கோர முடியாது.