பெரிய காரியங்களில் இறங்க… மூன்று சூழ்நிலைகள்..
எப்போதெல்லாம் மனிதர்கள் பெரிய அளவிலான காரியங்களில் குதிக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், அவை பின்வரும் மூன்று சூழ்நிலைகளாகவே இருக்கும். 1. வேறு வழியே இல்லை என்னும் சூழ்நிலையில். 2. ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை முழுமையாக உணரும்போது. 3. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நகர முடியாமல் சிக்கிக்கொண்ட சூழ்நிலையில்.
முதலாவது சூழலில், வேறு வழியே இல்லை என்னும் சூழலில் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள குதிப்போம். இதுபோன்ற சூழ்நிலையில் மாற்றம் என்பது செய்தே ஆக வேண்டிய ஒரே ஒரு விஷயமாக நம்முன்னே இருக்கும். வேறெதையும் செய்வதற்கு வாய்ப்பே இருக்காது. உதாரணமாக, வேலையை இழந்த சூழல், திவாலான நிலை, பெரிய இழப்பு போன்ற வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வு… இது போன்ற சூழலில் இதுவா, அதுவா எனத் தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகள் இருக்காது. எமர்ஜென்சி எக்ஸிட் வழியாகக் குதிப்பது போன்ற சூழல். குதித்தே ஆக வேண்டும் என்கிற சூழலில் யாரும் நம்மைத் தள்ளி விட வேண்டியது இல்லை. நாமாகவே குதித்துவிடுவோம்.
2வது சூழலில், (வாய்ப்பைக் கண்டறிந்து குதிப்பது) நாம் ஏற்கெனவே சௌகரியமான நிலையில் சந்தோஷமாக இருப்போம். வாழ்க்கையை மாற்றி எதை யாவது சாதிக்க வேண்டும் மற்றும் அதற்கான முயற்சிகளை துணிந்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் வசதிகளுடன் இருப்போம். நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற துணிச்சலுடன் இந்தச் சூழ்நிலையில் நாம் புதிய காரியத்தில் குதிப்போம். இந்தச் சூழ்நிலையில் உள்ளது உள்ளபடி என்று பார்க்காமல், எதிர்காலத்தை சிறப்பாகக் கணிக்க முடிவதால் நாம் குதிப்போம்.
மூன்றாவது சூழலில், முன்னேற்றம் இல்லாத, போரடிக்கிற, ‘என் தகுதிக்கு நான் இருக்கும் நிலைமை சற்றும் சம்பந்தம் இல்லையே’ என்று நினைக்கக் கூடிய நிலையில் இருப்போம். அதாவது, பல விதமான சௌகரியம் இருக்கும். ஆனால், திறமைக்கேற்ற சவால்கள் இருக்காது. இந்தச் சூழ்நிலையில் ஏன் குதிக்காமல் இருக்கிறோம் எனில், தெரிந்த சூழலை விட்டு விட்டு, முன்பின் தெரியாத விஷயத்தில் ஏன் இறங்க வேண்டும் என்று நினைப்பதால் தான்.
இந்த 3 சூழ்நிலைகளிலும் வெவ்வேறு காரணங்களால் நாம் புதிய காரியங்களில் குதிப்போம் என்றாலும், என்ன காரணத்துக்காக நாம் புதிய காரியத்தில் குதிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவுக்கான நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் குதிக்கிறோம் என்பதுதான் விஷயமே!