அபார்ட்மென்ட்டில் வீடா…? காத்திருக்கும் பிரச்னைகள்
நமது நாட்டில் கிராமத்தில் உள்ளோருக்கு சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற இடப்பிரச்னை ஒரு விஷயமில்லை. ஆனால் நகரவாசிகளுக்கு தனி வீடு எளிதில் சாத்தியமில்லை. எனவே அவர்கள் அபார்ட்மென்ட்டில் வீடு வாங்குவதை எளிதாக நினைக்கின்றனர். ஆனால் அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும் முன் பல விஷயங்கள் குறித்து யோசிக்க வேண்டும்.
மக்கள் வசிக்க விரும்பும் இடத்தில் கட்டவுள்ள அபார்ட்மென்ட்டில் வீட்டை புக் செய்தவர்கள் முன்பணமாக பெரும் தொகையை வங்கியிலிருந்து இஎம்ஐ வசதியில் தருகிறார்கள். இதனால் வீடு கட்டும் வரை நமது பணம் வட்டி சேர்த்து இ.எம்.ஐ. வடிவில் செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது. உங்கள் அபார்ட்மென்ட்டின் கட்டட வேலைகள் எந்தளவு முடிந்ததோ அதற்குரிய மதிப்பீடு செய்து தான் பில்டருக்கு கொடுக்க வேண்டும்.
அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும் போது பராமரிப்புக் கட்டணம் என்ற பெயரில் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பில்டர்கள் வாங்கிக் கொள்கின்றனர். ஆனால் பல இடங்களில் பராமரிப்பு வேலைகளை அங்குள்ள அசோசியேஷன்கள் செய்கின்றனர். இதனால் ஏற்படும் வீண் செலவினங்களை கவனிக்க வேண்டும்.
அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும்போது அருகில் இருக்கும் மற்றொரு கட்டிடங்கள் மற்றும் நீச்சல்குளம், மெட்ரோ வாட்டர் உட்பட இதர வசதிகளை காண்பித்து விற்பனை செய்திருப்பார்கள்.
பில்டர் கூறியிருக்கும் அனைத்து வசதிகளும் நமக்கு கிடைக்குமா என்பதை உறுதி செய்த பின்பே வீடுகளை வாங்க வேண்டும்.
வீடு வாங்கும் போது வீட்டிற்கான சொத்து வரி சரியாக கட்டப்பட்டுளதா என்பதையும் ஆராய வேண்டும். அபார்ட்மென்ட்டில் வீடு வாங்குபவர்கள் கார் பார்க்கிங் வசதிக்கும் சேர்த்தே பணம் செலுத்துவது நல்லது.
ஏனெனில் எதிர்காலத்தில் கார் வாங்கும் வசதி இருக்கும் போது இடமில்லை என்றால் வண்டி நிறுத்துவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.