திருச்சி நாளந்தா வேளாண்மை கல்லூரியில் வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி
திருச்சி நாளந்தா வேளாண்மை கல்லூரியில் கிராம தங்கல் திட்டத்தில் பங்கேற்ற மாணவ மாணவிகளின் வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
திருச்சி சமயபுரத்தை அடுத்த MR பாளையத்தில் அமைந்துள்ளது நாளந்தா வேளாண்மை கல்லூரி. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இக்கல்லூரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நேரடி விவசாய பயிற்சி மூலம் சிறு சிறு குழுக்களாக தனித்தனியே நிலங்கள் வழங்கி, அவர்களை காய்கறி உட்பட தானிய வகைகளை விதைத்து, வளர்த்து, அறுவடை செய்யும் வரை கண்காணிப்பும், ஆலோசனைகளும் வழங்கி நேரடி பயிற்சி தரப்படுகிறது.
மேலும் கோழி, ஆடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் நேரடிப் பயிற்சி தரப்படுகிறது. இங்கு இறுதியாண்டு பயிலும் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட மாணவ மாணவிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு கிராம தங்கல் எனும் திட்டத்தின் கீழ் 60 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, ஆலந்தூர் கேட், மற்றும் பெரம்பலூர் பகுதியில் கிராமங்களில் தங்கியிருந்து, விவசாயிகளிடம் நேரடி விவசாய அனுபவம் பெற்றனர்.
பழங்கால விவசாய முறைகள், விவசாயிகளின் சிரமங்கள், சந்தைப்படுத்துதல், பயிர்பாதுகாப்பு, நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் அனுபவ பாடம் பயின்றனர்.
தொடர்ந்து 5 நாட்கள் வேளாண் தொழிற்சாலைகளில் பார்வையிடல், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் தொடர்பான நடைமுறைகள் குறித்த 5 நாட்கள், மேலும் விவசாயம் சார்புடைய தன்னார்வ தொண்டு அமைப்புகளிடம் 5 நாட்கள், கூடுதல் விவசாயம் தொடர்பான தகவல்கள் பெறுதல் என 75 நாட்கள் தொடர் நேரடி பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முடிவில் மாணவ மாணவிகள் தங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி நடத்தினர்.
கல்லூரி வளாகத்தில் தாளாளர் இங்கர்சால் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் ஜீவாமிர்த கரைசல் தயாரிப்பு முறை, பசுந்தாள் உரம், பஞ்சகாவியம், பயோகேஸ், உரப்பாசனம் தயாரித்தல், சொட்டு நீர் பாசனம், பயிர்கள் மதிப்பு கூட்டுதல், நீர்வளம் மேம்படுத்துதல், வேளாண்மையில் நவீனயுத்தி, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், பயிர்களை தாக்கும் நோய்கள், நோய் எதிர்ப்பு முறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கண்காட்சிகள் அமைந்திருந்தன.
இக்கண்காட்சியினை அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் மாசிலாமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பார்வையிட்டு மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். நாளந்தா வேளாண்மை கல்லூரி முதல்வர் சேகர் வழிகாட்டுதலின்படி உதவி பேராசிரியர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியை பி.கே. அகரம், சரடமங்கலம், திருப்பட்டூர், வாளாடி, சிறுகனூர், நெடுங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள் பார்வையிட்டு பயனடைந்தனர்.