அடுத்தடுத்த அதிரடியில் பத்திர பதிவுத்துறை..!
பத்திரப்பதிவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவில் இடைத்தரகர்கள் தலையீட்டை தவிர்க்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எழுத்தர்கள் பதிவு உரிம எண்களை பதிவு செய்ய வேண்டும். பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் கொடுத்துள்ள எண்களையும் பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு அதிரடிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு உத்தரவினை பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் பிறப்பித்துள்ளார்.
அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர், வழக்கறிஞர் பெயர், உரிமம் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பம் இட வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அனைத்து பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மாதிரி படிவம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், ஆவணத்தின் இறுதி பக்கத்தில் 2 சாட்சிகளின் பெயர், தந்தை பெயர், முகவரி, அடையாள அட்டை, மொபைல் எண் இடம் பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து கீழ்ப்புற பகுதியில் சான்று செய்தவர் என்ற குறிப்பிட்டுள்ளதில் ஆவண எழுத்தர் புகைப்படம், அவரது கையொப்பம், ஆவண எழுத்தர் பெயர் முகவரி மொபைல் எண், ஆவண எழுத்தர் உரிமம் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இந்த ஆவணத்தின் கடைசி பக்கத்தில் முழு விவரம் இல்லாவிட்டால் பத்திரப்பதிவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.