செயலி மூலம் கடனா..! ரிசர்வ் வங்கியின் BE ALERT அறிவிப்பு!
நடுத்தர மக்களுக்கு பெரும்பாலும் பணத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்நேரத்தில் ஒருவன் வாராது வந்த மாமணியாக நம்மை அழைத்து கடன் தருகிறேன் வாங்க என்று அழைத்தால் எந்தவித யோசனையும் இன்றி விட்டில் பூச்சியாய் அவர்களின் வலையில் விழுகிறோம். உங்கள் அலைபேசிக்கு ஒரு மெசேஜ் வரும். உங்களுக்கு ரூ.1 லட்சம் லோன் தர நாங்க ரெடி என்று.!
உடனே அந்த செயலிக்குள் புகுந்தால், அவர்கள் பல்வேறு ஆவணங்களை கேட்பார்கள். இறுதியாக உங்களுக்கான லோன் பணத்தை ரிலீஸ் செய்ய ப்ராசஸிங் பீஸ் என ஒரு தொகையை சொல்வார்கள். நீங்கள் கடன் பெற இருக்கும் ஆர்வத்தில் உடனடியாக அந்த பணத்தை செலுத்துவீர்கள். அத்தோடு முடிந்தது, உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு. உங்களை அழைத்தவர்களை நீங்கள் மீண்டும் அழைத்தால் போன் எடுக்க மாட்டார்கள். செயலி மூலம் கேள்வி கேட்டாலும் பதில் தரமாட்டார்கள். இப்படியான செயலிகள் ஏராளமாக உலா வருவதை கண்ட ரிசர்வ் வங்கி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யாத செயலி மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை நம்பாதீர்கள். செயலிகள் பயன்படுத்தி கடன் வழங்கும் நிறுவனங்களிடம் மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற நிறுவனங்களிடம் ஒருபோதும் வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களை வழங்கக் கூடாது. விரைவாக கடன் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் செயலிகள் நடத்தும் நிறுவனங்களிடம் மக்கள் ஏமாந்து விட வேண்டாம் என்றும் இணைய தளங்களை பயன்படுத்தும் போது வங்கி விபரங்களை கொடுப்பதற்கு முன், இணைய முகவரி பற்றி முழுமையாக அறிந்து கவனமுடன் கையாள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.