தீப்பெட்டி தயாரிப்பும் சிவகாசியும்… வரலாறு முக்கியம் மக்களே..!
இந்தியாவில் தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழில் 1895-ம் ஆண்டு ஆரம்பமானது. தீக்குச்சிகளும் முதல் உலகப் போருக்கு முன்பாகவே (1914-க்கு முன்பாக) இந்தியாவின் பல பாகங்களில் உற்பத்தி செய்யப் பட்டு வந்தன. 1894-ம் ஆண்டு இன்றைக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அம்ரித் மேட்ச் ஃபேக்டரி ஆரம்பிக்கப்பட்டது.
1895-ம் ஆண்டில் இஸ்லாம் மேட்ச் ஃபேக்டரி அகமதா பாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1906-ம் ஆண்டு பந்தே மேட்ச் ஃபேக்டரியும் ஓரியன்டல் மேட்ச் ஃபேக்டரியும் கொல்கத் தாவில் ஆரம்பிக்கப்பட்டன. 1929-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான விம்கோ இந்தியாவில் பல இடங்களில் தனது தொழிற்சாலையை நிறுவியது.
கொல்கத்தாவில் இயங்கி வந்த பந்தே மேட்ச் ஃபேக்டரியில் ஆறு மாதம் வேலை பார்த்து விட்டு, 1922-ம் ஆண்டு மிகப் பெரிய திட்டத்துடன் அய்யன் நாடார், ஏ.சண்முக நாடார் என்கிற இரண்டு இளைஞர்கள் சிவகாசி திரும்பினர். இறக்குமதி செய்யப்பட்ட தொழில் நுட்பமும் உள்ளீடுகளும் மட்டும் உற்பத்திக்கு உதவாது என்று நினைத்து, குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் மரங்களைக் கொண்டும், உள்ளூர் மக்களை பணிக்கு நியமித்தும் தீக்குச்சிகளைத் தயாரித்து `பெங்கால் லைட்ஸ்’ என்கிற பெயரில் சந்தைப்படுத்த ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் பலரும் தீக்குச்சி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தனர். அதன்பின், வடக்கன்சேரி, விருதுநகர், கருவன்னூர், சாத்தூர், புதுக்கோட்டை எனத் தமிழகமெங்கும் தீக்குச்சித் தயாரிப்பு `தீ’யாகப் பரவியது.
1933-ம் ஆண்டு ராஜாமணி நாடாரால் ஆரம்பிக்கப் பட்ட சாத்தூர் ஒரிஜினல் மேட்ச் கம்பெனி (ஷிளிவிசிளி) அதனுடைய `சுப்பீரியர் லாம்ப்’ என்கிற டிரேட்மார்க்கை அதிகாரபூர்வமாக 1946-ம் ஆண்டு பதிவு செய்தார். மிகவும் பழைமையான டிரேட்மார்க்கு களில் இதுவும் ஒன்றாகும். அன்றைக்கே சுமார் 600 பேர் இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.
அந்தக் காலத்தில் தீப்பெட்டிகளில் மற்ற நிறுவனங் களின் விளம்பரங்களும், ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களும் இடம் பெற்றதுடன், அந்த லேபிள்கள் ஒரு சேகரிப்புப் பொருளாகவும் இருந்து வந்தன.
தீப்பெட்டித் தொழிலை மிகப்பெரிய அளவில் செய்து வந்த விம்கோ நிறுவனத்தை 2011-ம் ஆண்டு ஐ.டி.சி வாங்கியது. ஆனால், அடுத்த நான்கு ஆண்டுகளில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தமிழகத்தில் இருக்கும் சிறு தொழிற் சாலைகள் தயாரிக்கும் தீப்பெட்டிகளை வாங்கி விற்பனை செய்துவருகிறது.