ஜீரோ பட்ஜெட்டில் டிரெண்டிங் மார்க்கெட்டிங்.. 5 பைசா பிரியாணி…. வந்தா வெட்டுவோம்…
5 பைசா பிரியாணி.... வந்தா வெட்டுவோம்...
5 பைசா பிரியாணி…. வந்தா வெட்டுவோம்… ஜீரோ பட்ஜெட்டில் டிரெண்டிங் மார்க்கெட்டிங்..
தொழிலை பொறுத்தவரை, மார்க்கெட்டிங் எப்படி செய்கிறோம் என்பதில் இருக்கிறது சக்சஸ். தொடர்ச்சியான மார்க்கெட்டிங் மற்றும் புதிய மார்க்கெட்டிங் டெக்னிக் இருந்தால் எல்லா பிசினஸ்களிலும் வெற்றி என்பது சாத்தியமே. அந்த வகையில், திரைக்கு வந்த ‘விக்ரம்’ மற்றும் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படங்களுக்கு பிரபலங்கள் எப்படி மார்க்கெட்டிங் செய்துகொண்டனர் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
கமலின் ப்ரீடிரெய்லர்
“ஒரு திரைப்படம் ரிலீஸாகும் முன்போ, ரிலீஸான பின்போ ஊடகத்தைச் சந்தித்து பேட்டி கொடுப்பது எல்லா பிரபலங்களும் செய்யும் மார்க்கெட்டிங் உத்தி. ஆனால், விக்ரம் படத்துக்கு கமல் புதுவிதமான மார்க்கெட்டிங் டெக்னிக்கைக் கையாண்டார். படம் ரிலீஸுக்கு முன்பு ‘ப்ரீ-டிரெய்லர்’ ரிலீஸ் செய்தது, பஞ்சதந்திரம் படத்தில் நடித்த நடிகர்களை வைத்து விளம்பரம் செய்தது, இந்தியா முழுவதும் பயணம் செய்து ரசிகர்களைத் திடீரென்று சந்தித்தது எனத் தன்னுடைய படம் பற்றிய ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
பாலாஜியின் வளைகாப்பு செட்அப்
அதேபோன்று ஆர்.ஜே பாலாஜியும் தன்னுடைய படத்துக்கான விளம்பரத்தையும் திறம்படச் செய்தார். வளைகாப்பு செட்அப் போன்ற போட்டோ பேனர் சில திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்தது; அதில் நின்று புகைப்படம் எடுத்து, நிறைய ரசிகர்கள் ‘வீட்டுல விசேஷம்’ என்ற டேக் லைனுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
கேட்டீங்களா… கேட்டீங்களா..?
உங்களின் பிராண்ட் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று. கமல் தன்னுடைய படத்துக்கு ‘ப்ரீ புரொமோஷன்’ செய்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். உங்களுடைய பிராண்டில் என்ன புதுமை இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் கிளப்பி, அந்த பிராண்டை வாங்கச் செய்ய வேண்டும்.
மக்கள் அடிக்கடி பயணம் செய்யும் இடத்தில் பெரிய பேனர்களில் எந்தத் தகவலும் இல்லாமல், தொலைபேசி எண்ணை மட்டும் கொடுப்பது இந்த டெக்னிக்தான். சூரியன் எஃப்.எம் தங்களுடைய பிராண்டை லாஞ்ச் செய்த போது ‘கேட்டீங்களா? கேட்டீங் களா?’ என்ற வார்த்தையை வைரல் செய்து, ஒரு ஹைப்பை ஏற்படுத்தி, தங்களுடைய பிராண்டை மக்களிடம் கொண்டு சென்றனர். இது போன்று உங்கள் பிசினஸ் பற்றிய பிராண்ட் அவார்னஸை மக்களுக்குத் தெரியப் படுத்துவது அவசியம்.
உலகளவில் கவனம்
உங்களுடைய பொருளை எங்கு விற்கப் போகிறீர்கள், உங்களின் ஆடியன்ஸ் யார் என்ற தெளிவு இருக்க வேண்டும். கமல் தன்னுடைய படத்துக்குத் தமிழ்நாட்டில் மட்டும்கூட விளம்பரம் செய்துஇருக்கலாம். ஆனால், விக்ரம் படத்தின் டிரெய்லரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டு சர்வதேச அளவில் தன் படத்துக்கான ரசிகர்களை உருவாக்கினார். உங்களுடைய பிராண்ட் பொஷிசனிங்கை செட் செய்வதன்மூலமே, பிசினஸில் நீங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்ட முடியும்.
டிரெண்ட் மார்க்கெட்டிங் என்பது…
உங்களுடைய பிராண்டுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் எனில், ஓர் ஊடகத்தையோ இன்ஃப்ளூயன்சரையோ நீங்கள் அணுக வேண்டும். அதற்கு சில ஆயிரங்களாவது நிச்சயம் செலவாகும். ஆயிரக்கணக்கில் செலவழித்து ஒரு மீடியாவில் வருவதைவிட, வித்தியாசமாக யோசித்து, அதே சில ஆயிரங்களில் பல மீடியாக்களில் உங்களையும் உங்கள் பிராண்டையும் பேசுபொருளாக மாற்றுவதுதான் டிரெண்டிங் மார்க்கெட்டிங் டெக்னிக். இதைத்தான் கமல்ஹாசனும், ஆர்.ஜே பாலாஜியும் செய்தனர்.
பேசுபொருளாக மாறுங்கள்…
கமல் தன்னுடைய படம் பற்றிய ஒரு ‘ஹைப்’பை மக்களிடம் ஏற்படுத்த வேண் டும் என்பதற்காக துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் விக்ரம் படத்தின் புரொமோவை வெளியிட்டார். உங்கள் பிராண்டுக்கு நீங்கள்தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் பிராண்ட் பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதை இலக் காக எடுத்துக்கொள்ளுங்கள். கமல் போன்று கார் பரிசு தந்தால்தான் பேசுபொருளாக முடியும் என்பதில்லை. வாடிக்கையாளர் அணுகு முறை, லோகோ என எல்லா வற்றிலும் மார்க்கெட்டிங் உத்தியைப் பயன்படுத்தலாம்.
வந்தா வெட்டுவோம்…
உங்களுடைய பிசினஸ் கார்டு தயார் செய்வதில் தொடங்கி, லோகோ ஃபிக்ஸ் செய்வது வரை எல்லாவற்றையும் கொஞ்சம் புதுமையாக யோசியுங்கள். உதாரணமாக, சென்னையில் உள்ள ஒரு சலூன் கடைக்கு ‘வந்தா வெட்டுவோம்’ என்று பெயர் வைத்தார்கள்.
இந்த வித்தியாசமான பெயர் நிறைய மக்களை ஈர்த்ததுடன், ஒரு நிமிடம் சிந்திக்கவும் வைத்தது. அந்தப் பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டும் ஆனது. எனவே, அந்த சலூனின் பேனரை நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் இலவசமாக விளம்பரம் கிடைத்தது. இதேபோன்றுதான் ‘5 பைசா பிரியாணி’ போன்ற விளம்பரங்கள். அதே போல், உங்கள் பிராண்டை எப்படி பேசு பொருளாக மாற்றலாம் என்று சிந்தியுங்கள்.
தொடர் விளம்பரம் அவசியம்…
ஒரு விளம்பரத்தின் மூலம் மட்டும் மக்களை, வாடிக்கையாளர்களை நெருங்கிவிட முடியாது. உங்களின் ஒரு விளம்பரம் வித்தியாசமாக இருக்கிறது எனில், மக்கள் அதைப் பேசி கடந்துவிடுவார்கள். தொடர் விளம்பரம் செய்தால் மட்டும்தான் அதைக் கவனிக்கத் தொடங்குவார்கள். அதன்பின் வாடிக்கை யாளர்களாக மாறுவார்கள். எனவே, உங்கள் பிராண்ட் சார்ந்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ பதிவிடுவது, சின்னச் சின்ன வீடியோக்கள் பதிவிடுவது என ஆக்டிவ்வாக இருங்கள்.
விமர்சனங்களை பாசிட்டிவ்வாக மாற்றுங்கள்…
எல்லா இடத்திலும் நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். அதை உங்களுக்கு எப்படி பாசிட்டிவ்வாக மாற்றலாம் என மாற்றி யோசியுங்கள். ஆர்.ஜே பாலாஜி தன்னை ட்விட்டரில் ட்ரோல் செய்தவர்களைத் தொகுத்து, அந்த கன்டன்ட்டை மீம்ஸ்களாக மாற்றி, அதையும் புரொமோஷனாக மாற்றிக் கொண்டார்.
இன்னும் சில செலிபிரிட்டிகளும், யூடியூபர்களும்கூட, தங்களுடைய கமென்ட் பாக்ஸை வாசிப்பதை ஒரு வீடியோவாகப் பதிவிட்டு, பார்வையாளர்களை அதிகரித்துக்கொள்கிறார்கள். எனவே, உங்களுக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்களை பாசிட்டிவாக மாற்ற முயற்சி செய்யுங்கள். மாற்றி யோசித்தால் ஜீரோ பட்ஜெட்டில்கூட டிரெண்டிங் மார்க்கெட்டிங் சாத்தியமே..!